பெரியார் சிலை அவமதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காரணமான குற்றவாளி ஹெச்.ராஜா தான் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டி, இந்தியாவுக்கே சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கிய பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என்று மமதையோடும், திமிரோடும் பேசிய ஹெச்.ராஜாவை தமிழக அரசின் காவல்துறை கைது செய்யாமல், மத்திய அரசுக்கு கொத்தடிமை வேலை செய்கிறது.

மேடையில் பொது அமைதிக்கு விரோதமாகப் பேசினார் என்று சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸைக் கைது செய்த தமிழக காவல்துறை ஹெச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? நீதிமன்றத்தையும், காவல்துறையையும் கீழ்த்தரமான சொற்களால் இழிவுபடுத்திப் பேசிய பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் ஒரு பக்கம் வரும்போது, நாள்தோறும் காவல்துறை பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளில் அந்த மனிதர் கலந்துகொள்கிறார் என்றால் இதைவிட தமிழக காவல்துறைக்கு அவமானம் வேறொன்றும் இருக்க முடியாது.
பெரியார் சிலை அவமதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காரணமான குற்றவாளி ஹெச்.ராஜா தான் எனும் நிலையில், அவரை தமிழக காவல்துறை கைது செய்து தன் கடமையை ஆற்ற வேண்டும்.
ஹெச்.ராஜா கைது செய்யப்படாவிட்டால் அனைத்து அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்திருக்கிறார். அதுவே தமிழக அரசுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை ஆகும்”என வைகோ தெரிவித்துள்ளார்.